//
you're reading...
Articles ( கட்டுரைகள் ), Koddaikallar ( கோட்டைக்கல்லாறு )

கோட்டைக்கல்லாறு கிராமம் – T.நிஷாந்தன் B.A (Hons) in Soc

சமூக உயர்கல்வி சேவைகள் ஒன்றியம் கடந்த வருடம் (2013) வெளியிட்ட செந்தூரம் எனும் புத்தகத்திலிருந்து சமூக உயர்கல்வி சேவைகள் ஒன்றியத்தின் செயலாளர் த.நிஷாந்தன் அவர்களினால் எழுதப்பட்ட கோட்டைக்கல்லாறு கிராமம் பற்றிய ஆக்கம்

கோட்டைக்கல்லாறு கிராமம்

கோட்டைக்கல்லாறு கிராமமானது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிறிய கிராமமாகும். ‘மீன்பாடும் தேன்நாடு’ என்று மட்டக்களப்பு சிறப்பித்து கூறப்படுவதற்கு தகுந்தாற் போல் இக்கிராமம் நாற்புறமும் நீரினால் சூழப்பட்டு இரு மருங்கிலும் தாம்போதிகளால் இணைக்கப்பட்ட ஒரு அழகிய தீவாக விளங்குகின்ற அதேவேளை கல்வியில் சிறப்புப் பெற்று பல கல்விமான்களை ஈன்றளித்த கல்வியூராக திகழ்கின்றது. இதனால் கல்லாறு ‘கல்வியாறு’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றது. சுற்றிலும் நீரினால் சூழப்பட்டுள்ளமையினாலும், கடற்கரைப் பிரதேசத்தினை அண்மித்துக் காணப்படுவதனாலும் மீன்பிடி அம்மக்களின் வாழ்வாதாரப் பூர்த்தியில் பிரதான இடத்தைப்பெற்று வந்திருக்கிறது. காலவோட்டத்தில் கல்வியினூடாக ஏற்பட்ட சமூக மாற்றம் மீன்பிடித்தொழிலில் பெரு வீழ்ச்சியை உண்டாக்கி கல்வித் துறையில் பெருவளர்ச்சியை அடையச் செய்தது.

30673661

 • கோட்டைக்கல்லாறு பெயரின் சிறப்பு

இக்கிராமத்தினைச் சுற்றி ஆறும், உப்பு நீரைக் கொண்ட ஓடையில் கற்பாறையும் நிறைந்து காணப்படுவதனால் ‘கல்லாறு’ என அழைக்கப்பட்டது. அப்பாறை கண்ணாப்பாறை என்றழைக்கப்பட்டது. இப்பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளமானது விரைவில் கடலுக்குள் வழிந்தோடுவதற்குரிய தரைத்தோற்ற அமைப்பினை கொண்டிருப்பது இக்கிராத்திற்கேயுரிய தனித்துவத் தன்மையினை எடுத்துக்காட்டுகின்றது. கடலுக்கும் ஓடைக்குமிடையிலான இணைப்பு முகத்துவாரம் என இக்கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. இவ்முகத்துவாரம் பெரும் மழைகாலத்தில் வெட்டப்பட்டு பங்குனி, சித்திரை மாதங்களில் தானாக மண்வார்க்கப்பட்டு மூடப்படகிறது. 18ம் நூற்றாண்டளவில் ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப்பகுதிகளை கைப்பற்றலாயினர். அவ்வேளையில் தங்களது வணிகத்திற்கும், கடல் போக்குவரத்திற்கும் இப்பிரதேசம் ஏற்றதெனக் கருதி வெட்டப்பட்டிருந்த முகத்துவாரத்தினூடாக ஒல்லாந்தர் இக்கிராமத்தினை வந்தடைந்தனர். அதன்பின்னர் தங்களது ஆட்சியினை நிலைப்படுத்துவதற்கான பணியிடங்களை அமைப்பதில் முனைப்புடன் செயற்பட்டனர். அதாவது கோட்டை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அதன் முதற் கட்டமாக ஒல்லாந்தர் கிணறு ஒன்றினை கட்டினர்.

அவ்வாறிருக்கையில் முகத்துவார வாய்க்கால் அடைக்கப்பட ஒல்லாந்தர் தங்களது வர்த்தக நோக்கில் கப்பல்களை கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்நோக்கியதனால் கோட்டை அமைக்கின்ற வேலையினை இடையில் கைவிட்டு மட்டக்களப்பில் இன்று கச்சேரி அமைந்திருக்கும் இடத்தில் கோட்டையினை அமைத்துக்கொண்டார்கள். ஒல்லாந்தரினால் கட்டப்பட்ட கிணற்றினது சிதைவுகளை இன்றும் எம்மால் பார்க்கக் கூடியதாக உள்ளது. அத்தோடு இக்கிணறு அமைந்தள்ள சிறுபிரதேசம் இன்றும் ‘கோட்டைவாசல்’ என அழைக்கப்படுகிறது. ஒல்லாந்தர் வருகையின் முன்னர் கல்லாறு என அழைக்கப்பட்டது. ஒல்லாந்தர் கோட்டை அமைப்பதற்கு முயற்சி எடுத்ததனால் கோட்டைக்கல்லாறு என அழைக்கப்படலாயிற்று.

This slideshow requires JavaScript.

 • கிராமத்தின் வரலாற்றுப் பின்னணி

கோட்டைக்கல்லாறு கிராமம் ஆரம்பத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியாகக் காணப்பட்டது. அதன் பின்னர் இப்பிரதேசத்தின் செழிப்பை அறிந்த மக்கள் இங்கு வந்த குடியேறியதாக பல கதைகள் கூறப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் ஒல்லாந்தர் இக்கிராமத்தில் வந்திறங்கி கோட்டை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட அதே காலகட்டப் பகுதியில் இக்கிராமத்திற்கு தெற்கே அமைந்துள்ள பெரியகல்லாற்றின் வட பகுதியில் ஒரு குழுவினர் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றினை கட்டினர். இக்குழுவினர் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பதும் புரியாத புதிராக உள்ளது. இத்தேவாலயக் கட்டட வேலையின் போது அதில் வேலை செய்த மக்கள் தமக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் கோட்டைக்கல்லாறு பிரதேசத்தினை வந்து பார்வையிட்டனர். இக்கிராமத்தில் வசிப்பதற்கான சகல வளங்களையும் பெற்றுக் கொள்வதற்கான அதிக சாதகத்தன்மை நிலவியதனால் அதில் சிறு தொகையினர் முதலில் கோட்டைக்கல்லாற்றின் தென்பகுதியில் குடியேறினர். இவ்வாறு குடியேறியவர்கள் தென்சேரியினர் என அழைக்கப்படுகின்றார்கள். அதனைவிட இக்கிராமம் ஆரம்பத்தில் போக்குவரத்திற்கான பாதை காணப்படாமையினால் பெரியகல்லாற்றிலிருந்து ஆற்றைக் கடந்து வந்து குடியேறியதனால் அவர்களை ஆறுகாட்டியாகுடியினர் என அழைப்பர். இவ் ஆறுகாட்டியாகுடி பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு இன்றும் இக்குடிமரபினர் காணப்படுவது வரலாற்றை உறுதிப்படுத்துகிறது.

48607148

இவர்களது குடியேற்றத்தினை தொடர்ந்து படிப்படியாக மக்கள் தொகை அதிகரிக்க இங்கு காணப்பட்ட காடுகளை கெடுத்து குடியிருப்புக்களை அமைத்தனர். சனத்தொகை அதிகரிக்க குடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கண்ணகி அம்மன் ஆலயம் அமைப்பதற்கு குழந்தனாச்சி என்கின்ற பெண் 6 ஏக்கர் நிலத்தினை வழங்கியதாகவும், 8 நபர்களது பங்களிப்பிலே கிராமத்தில் அவ்வாலயம் அமைக்கப்பட்டதால் அவ் எட்டு பேரும் எட்டுக் குடிகளுக்கு மூலகர்த்தாக்களாக காணப்பட்டனர். அக்காலகட்டத்தில் கண்ணகி அம்மன் ஆலயம் சமூக நிறுவனமாக செயற்பட்டது. அதாவது எந்தவொரு அபிவிருத்தி திட்டமாக இருப்பினும் ஆலய பொதுக்கூட்டங்களிலேயே தீர்மானம் எடுக்கப்பட்டது. உதாரணமாக கிராமத்திற்கு மின்சாரத்தினை பெற்றுக் கொள்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டமை.

94619575

1957ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் கிராமத்தில் உயிர்ச் சேதம், பொருள்ச் சேதம் என்பன ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து 1978ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியினாலும் கிராமத்தின் அதிகமான குடியிருப்புக்கள் சேதமாக்கப்பட்டன. இவ்வாறு இயற்கை சீற்றத்திற்கு முகம் கொடுத்த மக்கள் யுத்தத்திற்கும் முகம் கொடுக்கத் தவறவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான, மக்களையும், கல்விமான்களையும் இக்கிராமம் இழக்க நேரிட்டது. அதுமட்டுமன்றி 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரலையானது இக்கிராமத்தின் எவ்வித உயிர் இழப்புக்களை ஏற்படுத்தவில்லையாயினும், கோடிக்கணக்கான பொருளாதார இழப்பினை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் சுனாமியினால் ஏற்பட்ட மீள்கட்டுமானம் இக்கிராமத்தின் அபிவிருத்தியில் பெரும் செல்வாக்கினை ஏற்படுத்தியிருப்பதனை கண்டு கொள்ள முடிகிறது. இன்று இப்பிரதேசத்தில் அபிவிருத்தி அடைந்துவரும் கிராமங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

 • சமூகக்கட்டமைப்பு

உலகில் காணப்படுகின்ற அனைத்து சமூகங்களும் ஏதோவொருவகையில் கட்டமைக்கப்பட்டே இருக்கிறது. அந்தவகையில் சமூகமானது பல்வேறு கூறுகளால் உருவாக்கப்பட்ட முழுமை அம்முழுமையின் இயக்கத்தில் அனைத்துக் கூறுகளினது பங்களிப்புக் காணப்படும் என்பதே செயற்பாட்டவாதிகளின் கருத்தாகும். சமூகத்தில் காணப்படும் கூறுகள் சமூக நிறுவனங்கள், பண்பாட்டுக்கூறுகள் என இரு பிரிவுகள் காணப்படுகின்றன. சமூக நிறுவனங்களில் குடும்பம், திருமணம், கல்வி, சமயம், பொருளாதாரம், அரசியல், சுகாதாரம் போன்றனவும் பண்பாட்டுக்கூறுகளில் நியமங்கள், விழுமியங்கள், சமூக சட்டங்கள், வழக்காறுகள், குறியீடுகள், மரபுகள், மொழிகள் என்பனவும் கொள்ளப்படுகின்றன. இக்கூறுகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாகக் செயற்படுவதனால் சமூக செயல் முழுமை பெறுவதாக அமைகிறது. கோட்டைக்கல்லாறு கிராமத்தின் சமூகக் கட்டமைப்பினை மேலே கூறப்பட்ட வகைப்பாட்டினூடாகப் பார்க்க முடியும்.

 • குடும்பம்

குடும்ப அமைப்பானது மனித சமூகத்தின் இன்றியமையாத நிறுவனமாகவுள்ளது. குடும்பம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் அவர்களுடைய சமுதாய மரபுப்படி சட்ட ரீதியாக மணவாழ்வில் இருவரும் இணைந்து ஒன்றாக வாழும் போது குடும்பம் தோற்றம் பெறுகிறது.(பக்தவக்சலபாரதி:2003,67) கோட்டைக்கல்லாறு கிராமத்தில் காணப்படும் குடும்ப அமைப்புக்கள் பற்றி நோக்கும் போது 1950 களிற்கு முன்னர் கூட்டுக் குடும்ப அமைப்புக்களே அதிகம் காணப்பட்டது. அதற்கு பின்னரான காலகட்டப் பகுதியில் ஏற்பட்ட நகரமயமாக்கம், சமூக மாற்றம், சனத்தொகைப் பெருக்கம், தனியுடைமைக் கொள்கையின் ஊடுருவல் போன்ற காரணிகளின் செல்வாக்கினால் பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைவடைந்து தனிக்குடும்ப அமைப்பு நிலைபெற்று வந்திருக்கிறது. இருப்பினும் இன்றும் ஆங்காங்கே ஒரு சில கூட்டுக்குடும்பங்கள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் மணவழிக் குடும்பங்களாகவே காணப்படுகின்றன.

இக்கிராமத்தில் சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற குடிமுறை மற்றும் சொத்துக்கள் தாய்வழி முறையில் பின்பற்றப்படுவதனால் இங்கு தாய்வழிக் குடும்பங்களே உள்ளது எனலாம். இக்கிராமத்தில் திருமணம் நிகழ்ந்த பின்னர் மணமகன் மணமகளின் வீட்டிலே வாழுகின்ற முறைமை காணப்படுகின்றமையால் தாயகக் குடும்ப அமைப்பு முறையும் காணப்படுகின்றது எனலாம். அதுமட்டுமன்றி இக்கிராமத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும் திருமணக்கட்டுப்பாடு சமுதாயத்தில் நிலவுவதால் இங்கு ஒருதார மணக்குடும்பங்களே காணப்படுகின்றன.

இக்கிராமத்தில் சில பெண்கள் மத்திய கிழக்காசிய நாடுகளில் பணிப்பெண்களாக பணிபுரிகின்றனர். அதனால் அவர்களது பிள்ளைகள் உறவினர்களின் பொறுப்பில் விட்டுச் செல்லப்படுகிறார்கள் இதனால் இப்பிள்ளைகள் வன்முறைகளுக்கு உட்பட்டு வருகின்றனர். அதனை கிராம மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழு கண்காணித்து கோட்டைக்கல்லாறு கிராமத்தில் குடும்பங்களில் சிறுவர்களுக்கான வன்முறை அதிகரித்து வருவதாக தனது அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வெளிநாட்டில் பணிப்பெண்களாக செல்லும் குடும்பப் பெண்களால் சமூகத்தில் குடும்பக் கட்டமைப்பினது ஒழுங்கில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

சுனாமிக்கு முன்னர்

சுனாமிக்கு முன்னர்

 • திருமணம்

திருமணம் என்பது ஓர் ஆணும், பெண்ணும் கணவன் மனைவியாக இணைந்து வாழ்வதற்கான சமூக அங்கிகாரக் கருவியே திருமணம் ஆகும். மனித இனம் தனது பால் உந்துதலை நிறைவு செய்து கொள்ள ஒரு நிறுவன அமைப்பிற்குள் ஏற்படுத்திய முறையே திருமணமாகும். “மனிதன் தன் வாழ்வில் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்படுத்திக் கொண்ட கருவியாக திருமணம் அமைகின்றது.(பாலுசாமி: 2004,553)

இக்கிராமத்தில் ஆரம்ப காலத்தில் திருமணமானது நெருங்கிய உறவினர்களுக்கிடையே இடம் பெற்றது. அதாவது மாமாவின் மகள், மாமாவின் மகன் (மச்சாள், மச்சான்) ஆகியோருக்கிடையில் இடம்பெற்றது. இம்முறை இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணங்களாலும், நெருங்கிய உறவினர்களுக்கிடையில் திருமண உறவினை வைத்துக் கொள்ளும் போது பிறக்கின்ற குழந்தைகள் உடல், உளரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதன் விளைவாலும் வலுவிழந்துவிட்டது.

இக்கிராமத்தின் வரலாற்றில் குடிமுறையும், சாதி முறையும் இறுக்கமான முறையில் பின்பற்றப்பட்டு வந்திருப்பதால் திருமணமுறையில் அவற்றினது செல்வாக்கு இன்றும் நிலவிவருகிறது. இங்கு ஒரே குடிமரபிற்குள் திருமணம் செய்கின்ற முறைமை சமூகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இவர்கள் ஒரே தாய் வகுத்துவாரின் வழிவந்தவர்களாகக் காணப்படுவதால் அண்ணன் தங்கை உறவினர்களாக காணப்படுவார்கள் என்பதனாலாகும். அதனால் ஒரு குடியில் பிறந்தவர் தனது குடி உறுப்பினர்கள் தவிர்ந்த வேறு குடியிற்குள் தனது திருமண உறவினை வைத்துக் கொள்ளுகின்ற முறைமை நிலவுகின்றது. இதனால் இங்கு புறமண முறை காணப்படுகின்றது. உதாரணமாக அச்சங்கிகுடி மக்கள், ஏனைய பெரியகுடி, வங்காளக்குடி, இராசாத்திகுடி மக்களைத் திருமணம் செய்வதைக் கூறலாம். இருப்பினும் சில குடும்பங்கள் ஒரே குடிக்குள் தங்களது திருமண உறவினை வைத்திருக்கிறார்கள். இத்திருமணங்களினை சமூகம் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் காலப் போக்கில் அவ்எதிர்ப்பு மறைந்து விடுகின்றன.

குடிமுறை புறமணமுறையை வலியுறுத்த சாதி முறைமை அகமணமுறையை வலியுறுத்துகின்றது. அதாவது இங்கு ஒரே சாதிக்குள்ளேயே திருமணம் செய்தல் வேண்டும் என்ற கட்டாயப்பாடு குடிமுறையை விட அழுத்தமான நிலை காணப்படுகிறது. இக்கிராமத்தில் பெரும்பாலானவர்கள் குருகுலக்கரையார் சாதியினராகக் காணப்படுகின்றனர். இவர்களே இக்கிராமத்தில் உயர் சாதியினராக விளங்குகின்றனர். ஊழியம் செய்யும் தாழ் சாதியினராக சலவைத் தொழிலாளர், முடிச்சவரம் செய்பவர் என்ற வகுப்பினர் காணப்படுகின்றனர். கரையார் அவர்களது சாதிக்குள்ளேயே திருமணம் புரிய வேண்டும். இக்கிராம உயர் சாதியினர் ஊழியம் செய்யும் தாழ் சாதியிலிருந்து ஆணையோ பெண்ணையோ மணத்துணையாக தெரிவு செய்ய சமூகம் ஒரு போதும் அங்கிகரிப்பதில்லை. இருப்பினும் விதிவிலக்காக சில காதல் திருமணங்கள் இவற்றை மீறி இடம்பெற்றுள்ளன. உதாரணமாக கரையார் – முடிச்சவரம் செய்பவர், சலவைத் தொழிலாளர் – கரையார். இவ்வாறாக திருமணம் செய்தவர்களை சமூக செயற்பாடுகளிலிருந்து தவிர்த்து நடத்துகின்ற போக்கு நிலவுகிறது.

இங்கு ஒருவனுக்கு ஒருத்தி என்கின்ற ஒருதாரமணமே காணப்படுகின்றது. இன்று இக்கிராமத்தில் அதிகம் காதல் திருமணங்கள் இடம்பெறுவதோடு அதிலும் இளவயதுத் திருமணமே அதிகமானதாகக் காணப்படுகின்றது. காதல் திருமணங்களுக்கு பெற்றோர் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கின்ற போதிலும், பின்னர் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர்களை ஏற்றுக்கொள்கின்றனர். காதல் திருமண முறையால் அகமணமுறை குறைவடைந்து வருகிறது. இக்கிராமத்தில் படித்தவர்களின் வீதம் அதிகமாகக் காணப்படுவதனால் கல்வி நிலையங்களிலும், தொழில் பார்க்கும் இடங்களிலும் காதல் ஏற்டுவதனால் வெளி இடத்தவர்களுடன் திருமண உறவுகளை அதிகமாக வைத்துக் கொள்ளுகின்ற போக்கும் நிலவி வருகிறது.

கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயம்

கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயம்

 • கல்வி

ஒரு சமுதாயத்தின் முன்னேற்றமானது கல்வி வளர்ச்சியில் தங்கியுள்ளது. கல்வி என்பது மனிதனை வாழ்க்கைக்கு தயார்படுத்துவதுடன் அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாகவும் காணப்படுகின்றது. இதனால் கல்வியானது மனிதனுக்கு மிக அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. கோட்டைக்ல்லாறு கிராமத்தில் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்கென மட்/கோ.க மகா வித்தியாலயம், மட்/கோ.க திருவள்ளுவர் வித்தியாலயம், மட்/கோ.க கண்ணகி வித்தியாலயம் என மூன்று பாடசாலைகள் காணப்படுகின்றன.

இக்கிராமத்தில் பாடசாலை நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து நாற்பது வருட காலப்பகுதிக்குள் கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கி கல்விக்கு பெயர் பெற்ற இடம் என்ற சிறப்பினையும் இக்கிராமத்திற்கு பெற்றுக் கொடுத்தார்கள். அதாவது 1965 களிலிருந்து 2005 வரையான காலப்பகுதிக்குள் பல கல்விமான்களை பிரசவித்து இப்பிரதேசத்தில் தலை சிறந்த கல்விமான்களை உருவாக்கிய பெருமையினை பிரதேச வரலாற்றில் இக்கிராமம் தடம் பதித்துக் கொண்டது. இதனாலே கோட்டைக்கல்லாறு கிராமம் ‘கல்லாறு’ எனச் சுருக்கமாக அழைக்கப்படுவதுண்டு இச்சுருக்கப் பெயரானது சிறப்புப் பெயராக ‘கல்வியாறு’ என்ற சிறப்புப் பெயரையும் பெற்றுக் கொண்டது.

ஆனால் இந்த உயர்வான நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. பாடசாலையும், சமூகமும் எந்தளவு முன்னேற்றமடைந்து சென்றதோ அதே வேகத்தில் இன்றைய நிலையில் கீழ்மட்டத்தினை அடைந்துள்ளமை கவலைக்குரிய விடயமென கல்வி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணங்களாக கல்விமான்கள் இக்கிராமத்தை விட்டு வெளி இடங்களுக்குச் சென்றமை, பெற்றோர்களின் அசமந்தப் போக்கு, பணப் புழக்கம் அதிகரித்தமை, வெளிநாட்டு மோகம், பாடசாலை நிருவாகத்தின் நெகிழ்ச்சிப் போக்கு, மாணவர்களின் இலட்சியமற்ற போக்கு, மாணவர்களின் நடத்தையில் வெகுசனத் தொடர்புசாதனங்களின் செல்வாக்கு(கையடக்கத் தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி) என்பன காணப்படுவதாக கல்வி ஆர்வலர்கள் தெரிவித்த வண்ணமுள்ளனர்.

IMG_4196

தற்போது கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம்

இந்த நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தி இக்கிராமத்தின் கல்வி மட்டத்தினை உயர்த்தும் பொருட்டு சமூக உயர் கல்வி சேவைகள் சங்கம்(CHESS) முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. தரம் 5, தரம் 11 மாணவர்களுக்கான சிறந்த மாதிரி வினாத்தாள்களை வாராவாரம் நடாத்தி வருகிறது. வருடாவருடம் கிராமத்து மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசளிப்பு விழாவையும் சிறப்பாக நடாத்துகிறது. அதுமட்டுமன்றி பாடசாலைகளில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்களை அவ்வெற்றிடங்களில் நிரப்பியுள்ளது. கல்விக் கருத்தரங்குகள், தொழில் வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைச் செயலமர்வுகள் போன்றவற்றினை இக்கிராமத்தின் சேவைமனப்பாங்குடைய கல்விமான்களது ஆதரவிலும் அவர்களது ஆலோசனையின் கீழும் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

COMMUNITY AND HIGHER EDUCATION SERVICES SOCIETY

COMMUNITY AND HIGHER EDUCATION SERVICES SOCIETY

 • சமயம்

சமூகத்தை சீர்படுத்துகின்ற சமூக நிறுவனங்களுள் சமயம் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இக்கிராமத்தில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தினைச் சார்ந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள். ஆரம்பத்தில் இது ஒரு இந்துக் கிராமமாகக் காணப்பட்ட போதிலும் ஜரோப்பியரின் வருகையின் பின்னர் தொழில், திருமணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக கிறிஸ்தவம், கத்தோலிக்க மதங்களுக்கு மதம் மாறி வாழ்ந்து வருகின்றனர். இங்கு இந்துக்களது வழிபாடுகளுக்காக பழமைவாய்ந்த ஆலயங்களாக கண்ணகி அம்மன் ஆலயம், முருகன் ஆலயம், கோட்டைவாசல் நாகதம்பிரான் ஆலயம், அம்பாரைவில் பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம், சிறி புற்றடி நாகலிங்கேஸ்வரர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம் என்பன காணப்படுகின்றன.

கிறிஸ்தவ மக்களது வணக்கஸ்தலங்களாக நாற்சதுர சுவிசேஷ சபை, கிறிஸ்தவ சபை, மெதடிஸ்த கத்தோலிக்க தேவாலயம் என மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் காணப்படுகின்றன. இங்கு விஷேட தினங்களில் விழாக்கள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதாவது கிறிஸ்மஸ், உதித்த ஞாயிறு, பெரிய வெள்ளி, ஒவ்வொரு ஞாயிறும் இடம்பெறும் ஆராதனை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கான பங்களிப்பினை கிறிஸ்தவ மக்கள் தவறாது கொடுத்து வருகின்றனர். இக்கிராமத்தில் திருமண பந்தத்தின் மூலம் பௌத்தர்கள் 4 பேர் குடியேறிய போதும் அவர்களுக்கே தனித்துவமான வணக்கஸ்தலங்களான பௌத்த விகாரைகள் எதுவும் கட்டப்படவில்லை. காரணம் குறைந்தளவான தொகையினர், அவர்கள் சைவம், கிறிஸ்தவம் போன்ற மதங்களுக்கு மாறிக் கொண்டமையே ஆகும்.

இக்கிராமத்தில் உள்ள இந்து ஆலயங்களில் வருடந்தோறும் திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றன. கண்ணகி அம்மன் ஆலயம் பழமை வாய்ந்த ஆலயமாகக் காணப்படுகிறது. இதனோடு இணைந்ததாகவே சித்தி விநாயகர் ஆலயமும் காணப்படுகிறது. இவ்வாலயம் சமூகத்தோடு நெருங்கிய தொடர்பினைக் கொண்டு காணப்பட்டு வந்திருக்கிறது. அதாவது இக்கிராமத்தின் ஆரம்ப காலகட்டத்தில் ஏதாவது ஒரு அபிவிருத்தி திட்டத்தினை மேற்கொள்வதாக இருந்தாலும் அவ்வாலயப் பொதுக் கூட்டத்திலேயே கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஊர்த் தலைவராக வண்ணக்கர் காணப்படுகின்றார். அவரே கிராமத்தில் உள்ள சகல ஆலயங்களுக்கும் தலைவராக பரிபாலனம் செய்கின்ற உரிமையினையும் அதிகாரத்தினையும் இக்கிராமத்து மக்கள் அவருக்கு வழங்கி வந்திருக்கின்றனர். அவ் அதிகாரங்கள் கிராமத்து கிளர்ச்சிக் குழுக்களால் தகர்த்தெறியப்பட்டு ஒவ்வொரு ஆலயத்திற்கும் தனித்தனி பரிபாலன சபைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

குடி மரபோடு கூடிய கண்ணகி அம்மன் ஆலயத் திருவிழா வைகாசி மாதம் இடம்பெறும். இது ‘பாடற்சடங்கு’ எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. இச்சிறப்பினை ஒத்ததாகவே மாரியம்மன் ஆலயத்திருவிழாவும் இடம்பெறுகிறது. இக்கிராமத்தில் சமயமானது சமூக முரண்பாடுகளை அன்று முதல் இன்று வரை ஊக்குவித்து வந்திருக்கிறது. இதன்விளைவாக இக்கிராமத்தில் இரண்டு மாரியம்மன் ஆலயங்கள் காணப்படுகின்றன. ஆனி மாதத்தில் மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்திருவிழா மாசி மகத்தில் கொண்டாடப்படுகிறது. இது பத்து நாள் திருவிழாவினைக் கொண்டு காணப்படுகிறது.

இக்கிராமத்தின் இன்றைய சூழ்நிலையில் மதமாற்றம் என்பது பாரிய பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளது. இக்கிராமத்தினை சேர்ந்த குறிப்பிட்ட சில கிறிஸ்தவ சபைகளானது மக்களது வறுமை நிலையினைக் குறிவைத்து அவர்களுக்கான அடிப்படை வசதிகளை(வீடு, பணம், கல்விக்கான உபகரணங்கள், சிறு கைத்தொழிலுக்கான உதவிகள்) ஏற்படுத்திக் கொடுப்பதன் ஒப்பந்தத்தின் பெயரில் மதம் மாற்றப்பட்டு வருகின்றனர். இது சமூக மாற்றத்தினை ஏற்படுத்தவதாக இருப்பினும் இச்செயற்பாடு மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளையும், காழ்ப்புணர்ச்சிகளையும் அதிகரிக்கச் செய்கிறது. இச்செயற்பாடு குறிப்பிட்டதொரு காலவோட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என இக்கிராமத்து இந்து சமய ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

This slideshow requires JavaScript.

 • ஆலயங்களும் சடங்குகளும்

இக்கிராமத்தில் ஆலயங்களில் சடங்கு சிறப்பாக மக்களால் வருடந்தோறும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இக்கிராமத்தில் சடங்குகள் என்பது மதத்தோடு அல்லது மந்திரத்தோடு தொடர்புபட்டது. இவை மரபினால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகள், செயற்பாடுகளின் தொகுதி என்று கொள்ளலாம். இம்மக்களின் வாழ்க்கையின் தளத்தில் இச்சமயச் சடங்குகளின் முக்கியமான அம்சம் நம்பிக்கையே. இந்த நம்பிக்கைதான் சடங்கு பற்றிய ஜதீகத்தில் ஒரு விருப்பினை ஏற்படுத்தகின்றது. முன்னர் நிகழ்ந்த ஒன்றை திரும்பவும் செய்வதன் மூலம் முன்னர் கிடைத்த அதே பலன்கள், விளைவுகள் நிகழும் என்ற நம்பிக்கையில் மீண்டும் மீண்டும் நிகழ்த்துதல் என்ற அர்த்தப்பாட்டினை சடங்கு பெறுகிறது.

இங்கு மாரியம்மன், கண்ணகி அம்மன் ஆலயங்களில் இடம் பெறும் திருவிழாக்கள் சடங்கு என்று சிறப்பு பெயரால் அழைக்கப்படும் வழக்கம் நிலவிவருகிறது. அந்தவகையில் கண்ணகி அம்மன் சடங்கானது வைகாசித் திங்களில் இடம்பெற்றுவருகிறது. இது ‘பாடற்சடங்கு’ எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது. இச்சடங்கு எட்டு நாள் கொண்டாடப்படுகிறது. ஓவ்வொரு நாளும் இரண்டு குடிகள் வீதம் சடங்கு இடம்பெறும். முதல் நாள் அம்மன் திருக்கதவு திறத்தலுக்கான சடங்கிற்கு பெரிய குடி மக்களே உரித்துடையவர்களாகக் காணப்படுகின்றனர்.

559259_192655180871259_1553196524_n

ஓவ்வொரு குடி மக்களும் தமது குடிக்கு ஒரு தலைவரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர் அடப்பனார் என அழைக்கப்படுவார். குடி மக்கள் குடியுணர்வோடு தமது குடிச்சடங்கு சிறக்க வேண்டும். என்ற அடிப்படையில் மேளதாளம், நடனம் (சிறுவர்களது கும்மி நடனம், இளைஞர்களது துள்ளலாட்டங்கள், கரகாட்டம்) பறவைக்காவடி, பட்டாசு வெடிகள் என பல தரப்பட்ட அம்சங்களோடு அடப்பனார் தலைமையில் மடையெடுப்பு வைபவம் இடம்பெற்று பின்பு ஆலயத்தில் அம்மன் திருச்சடங்கு இடம்பெறுகிறது. இவ்வாறு அனைத்துக் குடிகளும் ஆலயத்தில் போட்டியுணர்வோடும் தமது சடங்கு சிறக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடும் சடங்கினை நிகழ்த்தி இறுதியில் அம்மன் திருக்குளிர்த்தி பாடுதலோடு திருவிழா நிறைவு பெறுகிறது. அன்றிலிருந்து எட்டாம் நாள் வைரவர் பூசையோடு அம்மனது திருக்கதவு அடைக்கப்படகிறது. இது எட்டாம் சடங்கு என சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இங்கு இடம்பெறும் மாரியம்மன் சடங்கானது ஆனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பண்டைய முறைப்படி அமைந்த இச்சடங்குகளில், பூசாரியும், தெய்வம் உருவேறி ஆடுபவர்களும் முக்கியத்துவம் பெறுவர். இச்சடங்குகளின் போது உடுக்கு, தவில் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. வந்து வெளிப்படும் தெய்வங்களை காவியம் பாடி, வணங்கியும் இறுதி நாளன்று இத்தெய்வம் மனம் மகிழ பலிகொடுத்தல் அத்துடன் தீப்பாய்தல், பொங்கலிடல் குளிர்த்தி போன்ற பல்வேறுபட்ட சடங்குகள் இடம்பெறுகின்றன. இச்சடங்கில் தெய்வமாடுதல் நிகழ்வு அம்மனே மனிதனின் உடலில் புகுந்து ஆடுகிறாள் என்ற நம்பிக்கையின் பெயரில் இன்றும் சிறப்பாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். இச்சடங்கு ‘ஆடற்சடங்கு’ எனச் சிறப்பாக அழைக்கப்படுகிறது. இவ்வாறு இக்கிராமத்தின் இந்து ஆலயத்தில் இடம்பெறும் சடங்குகளாக குறிப்பிட்டுச் சொல்லமுடிகிறது.

மாரியம்மன் கோவில் சடங்குகள்

மாரியம்மன் கோவில் சடங்குகள்

இங்கு கிறிஸ்தவ ஆலயங்களில் இடம்பெறும் சடங்குகளாக உதித்த ஞாயிறு, பெரிய வெள்ளி என்பனவும். அதுமட்டுமன்றி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினைப் பெறுகின்ற ஞானஸ்தானச் சடங்கு மிகவும் முக்கியமாக கொண்டாடப்படுகிறது. இச்சடங்கில் ஞானஸ்தானம் பெறுபவர்களுக்கு பாதிரியாரால் கிறிஸ்தவ மதத்தின் புனித நீரும், அப்பமும் வழங்கப்படுகிறது. இங்கு ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டவர்களையே கிறிஸ்தவர்களாக கருதுகின்ற போக்கும் காணப்படுகிறது. கிறிஸ்தவர்கள், கிறிஸ்மஸ் திருவிழாவினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவில் ‘கரோல் கீதம்’; ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வீடுகளிலும் நத்தார் பாப்பா போன்று உடை அணிந்து சென்று இசைப்பது இவர்கள் முக்கிய சடங்காக விளங்குகின்றது. இவ்வாறு இக்கிராமத்தில் ஆலயங்களில் சடங்குகள் பல தரப்பட்டவையாக இடம்பெற்று வருகின்றன.

 • சாதிமுறை

இக்கிராமத்தில் சாதிமுறை குடிமுறை என்பன மக்களின் வாழ்வில் செல்வாக்கு செலத்துபவையாக விளங்குகின்றன. சாதி என்பது “ஒரு மனிதன் பிறப்பால் வேறுபடுத்தப்பட்ட சமூகப் படிநிலை ஒழங்குகளுக்கு ஏற்ற ஒழுங்கமைக்கப்பட்ட தனித்துவமான கலாசாரத்தை, நடத்தைமுறைகளைக் கொண்ட மக்கள் பிரிவுகள் காணப்படுதல் சாதி எனப்படும்.” இக்கிராமத்தில் சாதியினதும் அவர்களது சேவை முறையினதும் கட்டமைப்பு, சடங்கு அல்லது திருவிழாக்கள் இடம்பெறும் வேளையில் வெளிப்படுகிறது. அதாவது திருமணம், ஆலயத்திருவிழா, பூப்புனித சடங்கு, மரணச் சடங்கு போன்ற சடங்குகள் இடம்பெறும் போது ஒவ்வொரு சாதியினரும் தங்களது சேவைகளை வழங்குவதினூடாக சாதிக்கட்டமைப்பை பேணுவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சாதிகளுக்கிடையிலான இறுக்கத் தன்மை பேணப்படும்.

இங்கு வண்ணார், நாசிவர், கரையார் ( குருகுலக்கரையார் ), செங்குத்தர் போன்ற சாதி வகைப்பாட்டினர் காணப்படுகின்றனர். இதில் பெரும்பான்மையினராக கரையார் ( குருகுலக்கரையார் ) சாதியமைப்பினர் காணப்படுகின்றனர். இவர்கள் இக்கிராமத்தில் உயர் சாதியினராகக் காணப்படுவதனால் வெளிப்படையாக கரையார் என குறித்துரைக்கப்படுவதில்லை. கரையார் என்பது மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதால் குறிப்பிடப்படுகின்றது என்றும், இக்கிராமம் கரையோரப் பிரதேசத்தில் அமைந்திருப்பதால் அப்பெயர் வந்திருக்கலாம் எனவும், இச்சொல் மனம் கரையாதவன் என்ற அர்த்தப்பாட்டினையும் பெற்றுக் கொள்வதாக சிலர் கருத்துரைக்கின்றனர்.

இன்னும் சிலர் கரையார் என்பவர்கள் அர்ச்சுணன் வம்சமான குருகுல வம்சத்தின் வழிவந்தவர்கள் என்றும் இதனால் இவர்கள் ‘குருகுலக்கரையார் எனவும் அழைக்கப்படுவதாகவும் கருத்துரைக்கின்றனர். கு.ஓ.ஊ நடராசாவினது மட்டக்களப்பு மான்மியத்தில் இவர்களது தொழில் மீன்பிடித் தொழில் அல்ல என்றும் இவர்களது பிரதான தொழில் விவசாயம் என்றும் இவர்களை மீனவர்கள் எனக் கூறுவது பொருத்தமற்றது எனவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சாதியினரே கிராமத்தில் முதலில் குடியேறிய மக்கள் பிரிவினராகக் காணப்படுகின்றனர். இவர்களுக்கு சேவை செய்யும் பொருட்டே வண்ணார், நாசிவர் சாதியினர் கிராமத்தின் தலைமைப் பீடமாக இருந்த ஆலய நிர்வாக சபையினரால் அவர்கள் இருப்பதற்கான நிலங்களை வழங்கி அவர்களை இக்கிராமத்தில் குடியமர்த்தினர். அவர்கள் உயர் சாதியினருக்கு சேவை வழங்குவதற்கு ஈடாகவே அவர்களுக்கான இருப்பிடங்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்தக் காலகட்டத்திலே தான் சாதியினது இறுக்கத் தன்மை காணப்பட்டது எனலாம்.

இக்கீழ் நிலை சாதியினர் உயர் சாதியினரால் ஓரங்கட்டப்பட்டு ஊழியம் செய்யும் பிரிவினராகவே நோக்கப்பட்டார்கள். இதனை உணவு, உடை, சொத்துக்கள் போன்ற அம்சங்களில் வெளிக்காட்டினர். 1960 களிற்கு முன்னர் உயர் சாதியயினரக்கு எதிரே வண்ணார், நாசிவர் போன்ற தாழ் சாதியினர் அணியும் ஆடை அணிகலங்களில் கட்டுப்பாடு இருந்தது. அதாவது வண்ணார் சாதியினப் பெண்கள் சேலை அணிவர். ஆனால் மேற்சட்டை அணிய முடியாத நிலை. அதுமட்டுமன்றி குடை பிடிக்கக் கூடாது, பாதணிகள் அணியக் கூடாது என உயர் சாதியினரால் வற்புறுத்தப்பட்டிருந்தது. அதனை மீறி அணிகின்ற சந்தர்ப்பங்களில் உயர் சாதியினரால் அப்பெண்கள் இழித்துரைக்கப்படுவதுடன் மானபங்கப் படுத்தப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாக அறிய முடிகிறது. அதேவேளை ஆண்கள் உயர் சாதியினர் முன்னால் சால்வையினை (தோள் துண்டு) எடுத்து இடுப்பில் கட்டுதல் வேண்டும். இவ்வாறு கல்வியுரிமை, பேச்சுரிமை, சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் அவர்களுக்கான சுயம் பறிக்கப்பட்டதோடு ஆலயம் மற்றும் சமூக பொது நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கான உரிமை என்பவற்றிலும் இறுக்கத் தன்மை பேணப்பட்டு வந்ததை அறியமுடிகிறது.

இன்றைய காலகட்டத்தில் சமூக மாற்றத்தின் விளைவால் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியின் காரணமாக அனைவரும் கற்கலாம் என்ற நிலை ஏற்பட்ட பிற்பாடு தாழ்த்தப்பட்ட சாதியினர் வலுவினைப் பெற்று வருகின்றனர். சாதிக் கட்டமைப்பானது நவநாகரீக காலத்திற்கேற்ப மரபு ரீதியாக தாழ்சாதியினரிடையே பேணப்பட்டு வந்த இறுக்கத் தன்மையில் சற்று தளர்வேற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இருந்த போதிலும் உயர் சாதியினருக்கு சேவை வழங்குவதில் இறுக்கத் தன்மை பேணப்பட்டே வருகின்றது. இக்கிராமத்தில் வண்ணார் சாதியினர் 15 குடும்பங்கள் காணப்படுகின்றன. இவர்கள் ஆலயத்தில் வெள்ளை விரித்தல், வெள்ளை கட்டுதல், கூரைமுடி போடுதல் போன்ற சேவைகளை வழங்குவதோடு ஆலய உற்சவம் ஆரம்பிப்பதற்கு முதல் நாள் கிராமத்தின் ஒவ்வொரு சந்தியிலும் நின்று “அம்மன் திருக்கதவு நாளை திறக்கப்பட இருப்பதால் மக்கள் எல்லோரும் மது மாமிசம் இன்றி தூசி துப்பரவாக இருங்கள்” என்று அறிவிக்கும் தண்டக்காரனாகவும் விளங்குகின்றனர். ருது சாந்தி வீடுகளில் கூரைமுடி போடுதல் சடங்கினையும், இறந்த வீடுகளில் கூரைமுடி போடுதல், நிலபாவாடை விரித்தல், பிரேதத்தில் இருக்கும் ஆபரணங்களைக் கழட்டுதல், மாற்றுக் கொடுத்தல் என்ற சடங்குகளையும் மேற்கொள்வர்.
கோட்டைக்கல்லாறு கிராமத்தில் நாசுவர் சாதியினர் மரணச் சடங்கிலே அவர்களது சேவை அவசியப்படுத்தப்படுகிறது. பிரேதத்தை முகச்சவரம் செய்து குளிப்பாட்டி, வாய்க்கரிசு கொடுத்து, தலைக்கு ஓடு முட்டி கொத்துதல் என்ற சடங்குகளையும் செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் பறையர் சாதிப்பிரிவினர் இல்லாமையினால் ஆலயத்திருவிழா மற்றும் மரணச் சடங்குகளுக்கு வெளி இடங்களிலிருந்து வரவழைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இவர்கள் இக்கிராமத்தினை சேர்ந்தவர்கள் இல்லையாயினும் உயர் சாதியினருக்கு கீழ்ப்படிந்து அவர்களுக்கு சேவையாற்றுபவர்களாக விளங்குகின்றனர்.

இவர்கள் ஆலயத் திருவிழாக் காலங்களில் பூசை இடம்பெறும் வேளைகளிலும், அம்மன் வீதி ஊர்வலம் வரும் வேளைகளிலும் பறைமேளம் கொட்டுகின்றனர். மரணச் சடங்குகளில் பறைமேளம் அடிப்பதுடன் சுடுகாட்டில் பிரேதம் அடக்கம் செய்வதற்கான நிலம் கூறுகின்ற சடங்கும் இவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ் நில விற்பனை இறைசால் எனும் பழைய நாணயப் பெறுமதியில் இன்றும் கூறி வருவது இக்கிராமத்தின் பழமை போற்றும் பண்புகளில் ஒன்றாகத் திகழ்வதாக கூறுகின்றனர். இவ்வாறு சடங்கு முறைகளில் இறுக்கத் தன்மை பேணப்பட்டு வந்தாலும் மக்களது அன்றாட வாழ்க்கையில் சாதி ரீதியாக ஓரங்கட்டப்படாமல் அனைவரும் தற்பொழுது அன்னியோன்னியமாகப் பழகி வருகின்றனர்.

ஸ்ரீ அம்பாரைவில் முத்து மாரியம்மன் கோவில்

ஸ்ரீ அம்பாரைவில் முத்து மாரியம்மன் கோவில்

 • குடிமுறை 

கோட்டைக்கல்லாறு கிராமத்தின் குடிமரபு முறையானது இக்கிராமத்து மக்களால் மிக முக்கியமாகப் பேணப்பட்டு வருகிறது. குடிமரபு தாய்வழி சமூக மரபில் பேணப்பட்டு வருகிறது. தாய் எந்தக் குடிமரபோ பிள்ளைகளும் அவரது குடிமரபாகவே கொள்ளப்படுவர். உதாரணமாக இராசாத்தி குடியினைச் சேர்ந்த தாய் ஒருவரின் பிள்ளைகள் (ஆண், பெண்) அனைவரும் இராசாத்தி குடியினராகவே கருதப்படுவர். இங்கு சொத்துரிமையும் தாய்வழியிலேயே பேணப்பட்டுவருகிறது. இக்கிராமத்தின் தொடக்க காலத்தில் ஏழு குடிகளே பழமை வாய்ந்த குடிகளாகக் காணப்பட்டதாகவும், இதனை மட்டக்களப்பு மான்மியத்தில் உள்ள பாடல்வரி தெளிவுபடுத்துகிறது.

“கரையூரான் கம்பளியா ராறுகாட்டி
கருது முதலித் தேவன் வயித்திவேலன்
தலைசெறி வங்காளம் வீரமாணிக்கன்தான்
கரையார் குடியேழாய் தரித்தான் பாரில்”

இப்பாடலில் கூறப்பட்டுள்ள கரையூரார் குடி, ஆறுகாட்டியா குடி, வயித்திவேலன் குடி, வீரமாணிக்கன் குடி, கம்பளியார் குடி, முதலித்தேவன் குடி, வங்காளக் குடி போன்ற ஏழு குடிகளுமே பழமை வாய்ந்தவை எனவும் பின்னர் சனத்தொகை அதிகரிப்பினாலும், கிராமத்தில் வேறு இடங்களிலிருந்து வந்து குடியேறியவர்களினாலும், குடிகள் மேலும் மேலும் அதிகரித்து எல்லாமாக 13 குடிகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவை செம்பன்படை ஆராய்ச்சி குடி, முதலித்தேவன் குடி, சூரிய அடப்பன் குடி, ஆறுகாட்டியா குடி, இராசாத்தி குடி, கலைஞானி குடி, அச்சங்கி குடி, பெரிய குடி, வகுத்துவேலன் குடி, வங்காளக் குடி, சடைஞானி குடி, வீரமாணிக்கன் குடி என்பவையாகும்.(தில்லைநாதன்.எஸ், 2006: 67)

இக்குடிமரபில் இரண்டு வருட காலமாக கலைஞானி குடி, குடிகளிலிருந்து ஆலய பரிபாலன சபையினரின் ஏகமனதான தீர்மானங்களின் அடிப்படையில் நீக்கப்பட்டது. இதற்கான காரணம் கலைஞானி குடியானது வேற்றுக் கிராமங்களிலிருந்து வந்து குடியேறியவர்களையே இக்குடியினராகக் கருதப்படுவதனால், பெரியகல்லாற்றில் ஆறுகாட்டியா குடி வம்சம் காணப்படுகின்ற அதேவேளை பெரியகல்லாற்றில் ஆறுகாட்டியா குடியினைச் சேர்ந்த ஒருவர் கோட்டைக்கல்லாற்றில் வந்து திருமணம்புரியும் போது அவரைக் கலைஞானி குடியினராகவோ அல்லது ஆறுகாட்டியா குடியினராகவோ உள்ளடக்குவது என்ற நடைமுறைச்சிக்கல் தோன்றியமை, இக்கிராமத்தில் கலைஞானி குடிக்கு தாய்வழி மரபு இல்லாமை போன்றவை சுட்டிக்காட்டப்படுகிறது.

இக்குடிகள் கண்ணகி அம்மன் சடங்கில் முக்கியப்படுத்தப்படுகிறது. இங்கு திருவிழாவே சடங்கு என அர்த்தப்படுத்தப்படுகிறது. இச்சடங்கு எட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு குடிகள் வீதம் சடங்கு இடம்பெறுகிறது. இக்குடிமரபு முறையானது ஆலயச்சடங்குகளில் மாத்திரமல்லாது திருமணம், நிர்வாகம் போன்றவற்றிலும் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. திருமண முறையில் இக்குடிமரபு முறையானது இறுக்கத் தன்மையினைப் பேணி வருகிறது. ஒரே குடிக்குள் திருமணம் செய்யும் அகமண முறை சமூகத்தால் தடை செய்யப்பட்டு வேறு குடிக்குள் திருமணம் செய்யும் புறமண முறையே குடிமுறைமரபு ஏற்றுக் கொண்டுள்ளது. இருந்த போதிலும் ஒரு சில திருமணங்கள் விதிவிலக்காக இடம்பெற்றுள்ளது. அவை சமூகத்தால் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படாமல் சமூகத்திலுருந்து தவிர்த்து நோக்கப்படுகிறது. இக்குடிகளில் அச்சங்கி குடியினரே அதிக எண்ணிக்கையினைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகமுறை மாத்திரம் குடிமரபு முறையின் அடிப்படையில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

This slideshow requires JavaScript.

 • சுகாதாரம்

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற கூற்றுக்கமைவாக சுகாதாரமான வாழ்வே மனித வாழ்வுக்கு இன்றியமையாததாக அமைகின்றது. சத்துணவுகளை பிரதான உணவுப் பழக்கங்களாகக் கொண்ட இக்கிராம மக்கள் மனவலிமை மற்றும் உடல் நலனிலும் சிறந்து விளங்குகின்றார்கள். கல்வியறிவில் சிறந்து விளங்குவதால் அதன் மூலம் உடல்நலம் பேணுவதற்கும், சுகாதாரத்தைப் பேணுவதற்குமான அறிவினை மக்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். அரச பொது வைத்தியசாலை இக்கிராமத்தில் இல்லாதுவிடினும் இடைவலய மருத்துவ நிலையம், தாய்சேய் பராமரிப்புச் சிகிச்சை நிலையங்கள் போன்றவற்றின் வசதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. உடல் நலத்துடன் தொடர்பெனக் கருதப்படும் விளையாட்டின் அவசியம் கருதிய விழிப்புணர்வு ஈடுபாடு உடைய அமைப்புக்கள் பல தோன்றி இயங்கினாலும் நிரந்தர மைதானம் ஒன்று இல்லாதது இக்கிராமத்திற்கு ஓர் குறைபாடாகும்.

இக்கிராமத்தில் உள்ள மக்கள் சிகிச்சைக்காக களுவாஞ்சிக்குடி, பெரியகல்லாறு, கல்முனை போன்ற வைத்தியசாலைகளை அதிகமாக நாடுகின்றனர். இங்கு இரண்டு தனியார் மருத்துவ சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்கள் உள்ளதோடு மூன்று ஆயுள் வேத முறிவு வைத்தியர்களும் காணப்படுகின்றனர். மருந்துப் பொருட்களை விற்பனை செய்கின்ற தனியார் மருந்தகம் ஒன்றும் கிராமத்தின் நடுவில் காணப்படுகின்றது.

ஆரம்ப காலங்களை விட இன்று இக்கிராமத்தில் நோய்வாய்ப்பட்டவர்களின் வீதம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதற்கான காரணம் தொழிநுட்ப வளர்ச்சியினால் உணவுப் பொருட்களின் உற்பத்தியில் இரசாயனப் பதார்த்தங்களின் சேர்மானமே எனப்படுகிறது. அண்மைக்காலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வீதம் அதிகரித்து வருகிறது. இப்பிரதேசத்தில் அதிக புற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை இக்கிராமம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு இக்கிராமத்தில் பிடிபடும் ஒரு வகையான சிறிய மீன்களை உட்கொள்வதே இதற்கான காரணம் என சுகாதார வைத்திய அதிகாரசபை பரிசோதனை மூலம் நிரூபித்து அக்கருத்தை மக்களுக்கு வெளியிட்டு விழிப்புணர்வினை ஏற்படுத்தியுள்ளது.
புற்று நோய் மாத்திரமல்லாது குடற்புண், தொய்வு, நீரிழிவு, உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்கள் அனேகமான மக்களுக்கு ஏற்பட்டுள்ளமையினை அறிய முடிகிறது. கர்ப்பிணித் தாய்மாருக்கும், குழந்தைகளுக்குமான மருத்துவ சேவைகள் தாய்சேய் பராமரிப்பு நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

 • நெறிமுறைகள்

நெறிமுறைகள் என்பவை குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஏற்புடையதும் பொருத்தப்பாடுடையதுமான நடத்தைகளை வரையறை செய்யும் ஒரு வழிகாட்டியாகும். (பக்தவக்சலபாரதி:1999,160) இக்கிராமத்தில் பலதுணைமணம், பிறர்மனை புகுதல் என்பவை தவிர்க்ப்பட்டுள்ளது. இதனை மீறும் போது சமூகம் அவர்களை சமூக நடவடிக்கைகளிலிருந்து தவிர்த்து நடத்துகிறது.

குடும்ப அமைப்புக்களிலும் நெறிமுறைகள் பேணப்படுவதோடு ஆலயங்களிலும் நெறிமுறைகள் பேணப்படுகின்றன. இந்துக்களிடையே பெண்கள் விலக்குடைய காலங்களில் ஆலய வழிபாடுகளில் ஈடுபடாத நடைமுறையும் இங்கு பின்பற்றப்படுகிறது. அதுமட்டுமன்றி உறவினர் மரணித்தல், குழந்தை பிறத்தல், ருதுவாகுதல் போன்ற சம்பவங்கள் நிகழும் போது அவை தொடக்காகக் கருதப்பட்டு ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபட முடியாத முறையும் பின்பற்றப்படுகிறது. இங்கு தொடக்கு எனும் சொல் புனிதமற்றது என்ற அர்த்தப்பாட்டினைப் பெறுகிறது. இத்தொடக்கு தந்தைவழி மரபில் நோக்கப்படுகிறது.

This slideshow requires JavaScript.

 • மரபார்ந்த சமயச் சடங்குகள்

சடங்குகள் பொதுவாக வாழ்வியற் சடங்குகள், சமயச்சடங்குகள் என இரு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. இக்கிராமத்தில் மரபு ரீதியாகப் பின்பற்றப்பட்டுவரும் சமயச்சடங்குகளில் போர்த்தேங்காய் அடித்தல் மிகவும் சிறப்பாக நிகழ்ததப்பட்டு வருகிறது. இங்கு கண்ணகி அம்மன், மாரியம்மன் ஆலயங்களில் இடம்பெறும் திருவிழாக்களையும் சடங்கு என அழைக்கப்படுகிறது. (கண்ணகியம்மன் சடங்கு, மாரியம்மன் சடங்கு)

போர்த்தேங்காய் அடித்தல்

இது கொம்புமுறி விளையாட்டோடு தொடர்புடைய ஒரு சடங்காகவே நோக்கப்படுகிறது. இக்கிராமத்தின் முன்னோர்கள் கொம்புமுறி சடங்கினை கிராமத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ள வம்மியடியில் நிகழ்த்தி வந்ததாகவும். அதனது தொடர்ச்சியே போர்த்தேங்காய் அடித்தல் நிகழ்வு எனக் கூறப்படுகிறது. இதனது நோக்கம் மழையின்றி வாடும் வயல்களை அழிவிலிருந்து காக்கவும்,ä வெப்ப மிகுதியால் நாட்டில் பரவும் நோய்களைத் தீர்க்கவும், பத்தினியை(கண்ணகி) குளிர்விக்க வேண்டியும் அச்சடங்கு நிகழ்த்தப்பட்டு வந்திருக்கிறது.

இது சித்திரை வருடப் பிறப்புக்கு பின்னர் வரும் தினங்களில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிகழ்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதில் வடசேரி, தென்சேரி என்ற இரு குழுவினர் காணப்படுவர். கிராமத்திற்கு வடக்கே குடியேறியவர்கள் வடசேரியினர் எனவும், தெற்குப்பகுதியில் குடியேறியவர்கள் தென்சேரியினர் எனவும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குடிமரபு முறை தாய்வழி முறையில் பின்பற்றப்பட்டு வர, சேரி முறை தந்தை வழி முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. உதாரணமாக தந்தை வடசேரியாயின் பிள்ளைகளும் வட சேரியினைச் சேர்ந்தவர்களாவர். வடசேரித் தெய்வம் பிள்ளையாராகவும், தென்சேரித் தெய்வம் கண்ணகித் தெய்வமாகவும் நம்பிக்கை கொண்டு சடங்கின் இறுதியில் வெல்லும் சேரியினது வெற்றியானது தெய்வங்கள் தான் வெற்றி பெற்றதாக ஒப்புவிக்கும் நம்பிக்கை மக்களிடையே திடமாகக் காணப்பட்டுவருகிறது.

இப்போர்த்தேங்காய் உடைத்தல் சடங்கில் எதிர் எதிராக நிற்கும் இரு சேரியினதும் இருபிரதிநிதிகள் தங்கள் கைகளில் வலுவான சிரட்டையுடைய தேங்காய்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் நோக்கி எறிந்து அதில் எக்கட்சியினர் எதிர் அணியினரின் அதிக தேங்காய்களை அடித்து முடிக்கிறார்களோ அவர்களே வெற்றி அடைந்த சேரியினராக கருதப்படுவர். அதன் பின்னர் வெற்றி பெற்ற அணியினர் பட்டாசுகளை வெடிக்கச் செய்து ஆடல், பாடல்களில் ஈடுபடுவர்.

ஆரம்ப காலகட்டங்களில் இந்நிகழ்வில் வெற்றி பெறுபவர்கள் கூத்துக்களரிகளை அமைத்து கூத்து மற்றும் நாடக நிகழ்வுகளை நடாத்தி வந்ததாகவும் அறியமுடிகிறது. இப்போர்த்தேங்காய் உடைத்தற் பாரம்பரியச் சடங்கானது இன்றும் அழிந்து போகாமல் சிறுசிறு மாற்றங்களோடு இடம்பெற்று பழமை பேணப்பட்டு வருவது இக்கிராமத்தின் பழமையின் சிறப்பினை எடுத்துக்காட்டி நிற்கிறது.

போர்த்தேங்காய்

போர்த்தேங்காய்

 • விழுமியங்களும் சமூக சட்டங்களும்

சமூகம் குழப்பகரமின்றி சீராக இயங்குவதற்கு விழுமியம் என்பது அவசியமாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய விழுமியங்கள் தனித்துவமானதாகவும் வேறுபட்டும் காணப்படுகிறது. அந்தவகையில் இக்கிராமத்தின் மிக முக்கியமான விழுமியப்பண்பாக விருந்தோம்பல் பண்பு விளங்குகின்றது. அதுமாத்திரமல்லாது பெரியோரை மதித்தல், உண்மை பேசுதல், நேர்மை, களவாமை, பெண்களை தாய் போன்ற மதித்தல் போன்றவைகள் சமூகத்தினது சீரான இயக்கத்தினைப் பேணுகின்ற விழுமியங்களாக காணப்படுகின்றன. சமூக சட்டங்கள் என்பது சமூகத்தாற் பின்பற்றப்படுகின்ற சில விதிமுறைகளாகும். இவை எழுதப்படாத சட்டங்களாகக் காணப்படுகின்றன. இச்சமூக சட்டங்களை மீறுகின்ற போது சமூகத்திலிருந்து விலக்கி வைத்தல், புறக்கணித்தல் போன்ற தண்டனைகளையும் வழங்குகின்றன. இங்கு குடிமுறை, சாதிமுறை ரீதியான திருமணங்களில் எழுதப்படாத சமூக சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 • வழக்காறுகளும் நம்பிக்கைகளும்

வழக்காறுகள் என்பது “ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறையினருக்கு பழக்கவழக்கங்கள் தொன்று தொட்டு கடத்தப்பட்டு வருபவையாகும். இவை இக்கிராம மக்களது நம்பிக்கையோடும் ஜதீகத்தோடும் நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இவை செயற்பாடுகள் ஒன்றிணைந்து அனுமதிக்கப்பட்டவையாகும். இக்கிராமத்து வழக்காறுகள் இன்றும் மக்களது அன்றாட வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்திவருவதனைக் காணலாம். அந்தவகையில் மரணச்சடங்கில் ஒருவர் மரணித்த பின்னர் எட்டாம் நாள், முப்பத்தி ஓராம் நாள், மற்றும் ஓராண்டு நிறைவிலும் இறந்தவருக்கு பிரியமான உணவு, பால், பழங்கள் என்பன படைத்து அவரது ஆத்மா சாந்தி வேண்டி நிற்றல்; நிறைவேறாத ஆசையுடன் இருக்கையில் ஒருவர் மரணித்தால் அவர் சாந்தி பெறாமல் நிம்மதி இழந்து ஆவியாக வந்து மரண வீட்டை சுற்றித் திரிவர் என நம்புதல்; இதனை பஞ்சமி என அழைப்பர்.

ஆலயத்தில் தேங்காய் உடைக்கும் போது அது அழுகி இருந்தால் ஏதோ கெடுதல் வரப் போவதாக நம்புவது, அம்மை நோய் வந்தால் அம்மாள் கோவினை கொண்டுவிட்டாள் என்று அச்சப்படுதல், ஒரு பயணம் போகும் போது கால் இடறுதல், தலையில் நிலை தட்டுதல், பின்னால் இருந்து ஒருவர் அழைத்தல், பூனை குறுக்கறுத்தல், நாய் ஊளையிடுதல், அழகற்ற தோற்றமானோர் எதிரில் வருதல் அபசகுனமாகக் கருதப்படுகிறது. ஒருவர் உண்ணும் போது பயணம் புறப்படக் கூடாது என்ற நம்பிக்கையும் காணப்படுகிறது.

மேலும் ஒன்றைப்பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போது பல்லி சொல்லி விட்டால் உறுதியாக நடக்கக் கூடும் என நம்புதல், காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளி யாரோ வரப்போகிறார்கள் என நம்புதல், குழந்தைக்கு திருஷ்டி பட்டுவிடால் இரும்பு போடுதல், தலையைச் சுற்றி உப்பு போடுதல், நாயில் பயந்திருந்தால் குருக்கள் மூலம் தீருநீறு போடுதல், நூல் கட்டுதல், பெண்ணுக்கு வலக்கண் துடித்தல், ஆணுக்கு இடக்கண் துடித்தல் நல்லதல்ல என நம்புதல், இரவில் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு உணவு கொண்டு போகும்போது மூடிய பாத்திரத்திற்கு மேல் கரித்துண்டு, இரும்புத்துண்டு, பச்சை இலை வைத்தல், சாப்பிடும் போது புரையேறினால் யாரோ தம்மை நினைக்கிறார்கள் என நம்புவது, ஆலய உற்சவ காலங்களில் ஊருக்குள் மது, மாமிசம் தவிர்த்தல், நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல் என இக்கிராமத்தவர்களது வழக்காறுகளில் சிலவற்றைச் சுட்டிக்காட்ட முடிகிறது. இருப்பினும் இவை 20, 21ம் நூற்றாண்டுகளில் இவை கேள்விக்குள்ளாக்கப்பட்டு பொய்ப்பித்தலுக்கு உள்ளாக்கப்பட்டு இவை கட்டவிழ்ப்பு செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சுற்றிவர நீரினால் சூழப்பட்ட அழகிய தீவு

சுற்றிவர நீரினால் சூழப்பட்ட அழகிய தீவு

ஆக்கம் – த.நிஷாந்தன் B.A (Hons) in Soc
செந்தூரம் புத்தகத்தில் இருந்து

Advertisements

About Yuvan

Studying at Faculty of Medicine, University of Jaffna

Discussion

No comments yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Follow MY VISION on WordPress.com

Advertisements
%d bloggers like this: